சென்னை: பாரம்பரிய கட்டிடத்தில் இயங்கி வரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிர்வாக பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் நீதிமன்ற அறைகளுடன் தனித்தனி அறைகளில் இயங்கி வந்தன. இதனால் ஏற்படும் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, நிர்வாக பிரிவுக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, எஸ்பிளனேட் நுழைவுப் பகுதியில் கட்டப்பட்ட 11 மாடிகளைக் கொண்ட புதிய நிர்வாகப் பிரிவு கட்டிடத்தை நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி நடைபெற்ற விழாவில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், “நீதித்துறை தனது நீதியை விரைவாக வழங்குவதற்கு நிர்வாகப் பிரிவின் செயல்பாடு அவசியமானது மட்டுமல்ல, முக்கியமானதும் கூட. நீதித்துறையின் முதுகெலும்பாக விளங்கும் நிர்வாக துறைக்கு போதிய இடவசதி இல்லாத பிரச்னைக்கு, இந்த புதிய கட்டடம் தீர்வு கண்டுள்ளது.
இந்த புதிய கட்டிடத்தில் வழக்கு கோப்பு சேமிப்பு, கணக்குகள் மற்றும் நீதித்துறையின் வழக்கு அலுவலகங்கள் மற்றும் அஞ்சல் துறை உள்ளிட்ட நிர்வாக அலுவலகங்கள் இருக்கும். இந்த பல மாடி கட்டிடம் அமைக்க உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுப்ரமணியன், ஆர்.சுரேஷ் குமார், மத்திய அரசின் கூட்டு சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.