புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் விஜய் பால் டால்மியா. இவரது மனைவி நீலம். தம்பதியரின் மகன் சித்தார்த் டால்மியா. சில வருடங்களுக்கு முன்பு நீலம் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது நிலத்துக்கு தினமும் விலை உயர்ந்த ஊசி போடப்பட்டது. ஒரு ஊசியின் விலை ரூ. 61,132 ஆகும். இதே மருந்தை வெளிச் சந்தையில் ரூ. 40,000-க்கு வாங்க முடியும். ஆனால் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மருந்துகளை தங்கள் மருந்தகத்தில் மட்டுமே வாங்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியுள்ளது.
இதனால் நீலத்தின் மருத்துவச் செலவு கணிசமாக அதிகரித்தது. இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் விஜய் பால் டால்மியா மற்றும் அவரது மகனும் இளம் வழக்கறிஞருமான சித்தார்த் டால்மியா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், “தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள், நோயாளிகளின் மருந்தகங்களில் மட்டுமே மருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்களை வாங்க வற்புறுத்துவதை தடை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகள் அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகளை விற்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் மட்டுமே மருந்துகளை வாங்க, நோயாளிகளை யாரும் வற்புறுத்த முடியாது. “நோயாளிகள், அரசு மற்றும் தனியார் மருந்தகங்களில், தாங்கள் விரும்பும் மருந்துகளை வாங்கலாம்,’ என, கூறப்பட்டது. இதே கருத்தை வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில், பல்வேறு மாநில அரசுகளும், பதில் மனு தாக்கல் செய்தன. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் கூறியதாவது:-
தனியார் மருத்துவமனைகள் மருந்து, மாத்திரை, மருத்துவ உபகரணங்களை மருந்தகங்களில் மட்டுமே வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுவது வருத்தமளிக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. இது அரசின் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம். தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருந்தகங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வருகின்றன. எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காண, மாநில அரசுகள் புதிய விதிகளை வகுத்து, அவற்றை முறையாக அமல்படுத்த வேண்டும். ஏழை நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பல்வேறு மாநில அரசுகள் குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகளை விற்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இதை வரவேற்கிறோம். இத்துடன் இந்த வழக்கு முடிவுக்கு வருகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.