கடலூர்: திரு அருட்பிரகாச வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய தர்மச்சாலை மற்றும் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 154-வது ஜோதி தரிசனத்தையொட்டி நேற்று காலை 5 மணிக்கு சத்திய ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு தர்மசாலையில் புனித கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சத்திய ஞான சபையில் காலை 10 மணிக்கு புனித கொடி ஏற்றப்பட்டது.
இதில் ஏராளமான சமய அன்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். சத்திய ஞான சபையில் இன்று முக்கிய திருவிழாவான தைப்பூச ஜோதி தரிசனம் நடந்தது. சத்திய ஞான சபையில் காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான சமய அன்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை என்ற கோஷத்துடன் ஜோதி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, காலை 10, மதியம் 1, இரவு 7, இரவு 10 மணிக்கும், 12-ம் தேதி காலை 5.30 மணிக்கும் 6 முறை ஜோதி தரிசனம் நடைபெறும்.
இதையடுத்து, 13-ம் தேதி வியாழக்கிழமை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பம் பகுதியில் சித்திவளாக திருஅறை தரிசனமும் நடைபெறுகிறது. தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி, வடலூரில் ஜோதி தரிசனம் செய்வதற்காக வெளிமாநிலங்கள், வெளி மாநிலங்கள், வெளிமாநிலங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடலூரில் குவிந்தனர். தைப்பூச விழாவையொட்டி, சத்திய ஞான சபை, வள்ளலார் தெய்வ நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். வடலூரில் கடலூர் எஸ்பி ஜெயக்குமார், நெய்வேலி டிஎஸ்பிசபியுல்லா, வடலூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் உள்பட 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு ரயில்வே துறை சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து வடலூருக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வடலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் உணவு விநியோகம் செய்யப்பட்டது.