சென்னை: சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 36-வது மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கியது.
7-ம் தேதி (நாளை) வரை நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் 150 வகையான விளையாட்டுகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டிக்கான தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது.
தொடக்க விழாவில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம்,செயலாளர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தநிகழ்வில் தமிழ்நாடு தடகள சங்கம் உலக சாதனை படைத்தது.
2,500 வீரர்கள்ஒருங்கிணைந்து ஊக்கமருந்துக்கு எதிராகவும் போதை பொருளுக்கு எதிராகவும் விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். பிரிட்டனை சேர்ந்த வேர்ல்ட் ரெக்கார்ட்யூனியன் அமைப்பு இந்த நிகழ்வை உலக சாதனையாக அங்கீகரித்தது. தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா கூறும்போது, “பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் 5 பேர்ஏற்கெனவே தகுதி பெற்றிருக்கின்றனர்.
இன்னும் ஒரு வீரர் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த முறை நிச்சயம் தமிழ்நாட்டு வீரர்கள் பதக்கங்களை பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.