கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க, ஏற்கனவே 2 படகுகள் இருந்த நிலையில், கேரள போலீசாருக்கு மேலும் ஒரு படகு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழன்னை படகு 10 ஆண்டுகளாக அனுமதியின்றி நிறுத்தப்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை, தமிழக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்காக 8 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர அணை பாதுகாப்பு பணிக்காக கேரள போலீசாருக்கு ஏற்கனவே 2 படகுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 150 குதிரை திறன் கொண்ட மற்றொரு புதிய படகு கேரள போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எஸ்பி விஷ்ணு பிரதீப் படகை இயக்கி தேக்கடி ஏரியில் இறக்கினார். முன்னதாக, தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அணைக்கு பராமரிப்பு பணிக்காக செல்ல படகுகள் இயக்க முடிவு செய்யப்பட்டு, 2014-ல் ரூ. 2 பைபர் படகுகள் வாங்கப்பட்டன.
இதில், தேக்கடி ஏரியில் இருந்து படகு ஒன்றுக்கு தமிழன்னை என பெயரிடப்பட்டு இயக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி கேரள வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழக படகு 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது படகுக்கு கேரள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.