
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கை மத்திய குற்றப்பிரிவு (CBI) விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அளிக்கப்பட்ட தகவலின்படி, தமிழகத்தில் விவி மினரல்ஸ், டிரான்ஸ் வேல்டு கார்னெட் உட்பட ஏழு தனியார் நிறுவனங்களுக்கு மொத்தம் 64 தாது மணல் சுரங்க உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தன. 2013ஆம் ஆண்டு தாது மணல் எடுப்பதற்கு அரசு தடைவிதித்திருந்த நிலையில், தடை விதிக்கும் முன்பும், பின்னரும், சட்டவிரோதமாக தாது மணல் எடுத்ததால் மாநில அரசிற்கு ரூ.5,832.44 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு நியமித்த ககன்தீப் சிங் பேடி தலைமையிலான சிறப்பு குழுவின் ஆய்வில், 2018 முதல் 2022 வரை மட்டும் 16 லட்சம் டன் தாது மணல் சட்டவிரோதமாக கடத்தப்பட்டிருப்பதும், 6,449 டன் மோனோசைட் கனிமமும் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மோனோசைட் கனிமம் அணுசக்திக்கு முக்கியமான மூலப்பொருளாக இருப்பதால், மத்திய அரசு இதனை பிரித்தெடுக்க எந்த நிறுவனத்துக்கும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
வழக்கறிஞர் சுரேஷ் தாக்கல் செய்த அறிக்கையில், தாது மணல் தூத்துக்குடி துறைமுகம் வழியாக சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டதால், அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய அமர்வு இன்று (பிப்ரவரி 17) தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பில், ஊழல் ஒரு புற்றுநோயைப் போல் செயல்படும் என்பதைக் குறிப்பிடும் நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசியல் மற்றும் அதிகாரிகள் தொடர்பு இருப்பதைப் புறந்தள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்றம் சிபிஐயை உடனடியாக விசாரணை தொடங்குமாறு உத்தரவிட்டதோடு, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள தாது மணலை மத்திய அரசிடம் ஒப்படைக்கவும், தனியார் நிறுவனங்களிடம் அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.5,832 கோடியை வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அரசியல் வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பற்றி சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டவிரோத பணப்பரிமாற்றம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.