கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களை பதற்றத்தில் வைத்திருக்கும் நோக்கத்துடன் நடக்கின்றன என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக முருக பக்தர்கள் மாநாடு போன்ற நிகழ்வுகள், மதச்செல்வாக்கை அரசியலாக்கி மக்கள் இடையே குழப்பத்தை உருவாக்கும் முயற்சியே எனக் கூறினார். இந்த மாநாடுகளை தென் மாநிலங்களில் நடத்துவதற்கு எந்த தேவையும் இல்லை என்றும், அதற்குப் பதிலாக வட மாநிலங்களில் நடத்துவது சிறந்தது எனவும் அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு மாநிலமாக மதிக்காமல், அதன் நிதி உரிமைகள் குறைத்துப் பார்க்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், தமிழ்நாடு ஜிஎஸ்டி செலுத்துவதில் மூன்றாவது பெரிய மாநிலமாக இருந்தாலும், உரிய நிதியுதவி வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.
அதேபோல, அமித்ஷாவின் தமிழக வருகை குறித்து அவர், பாஜக தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறது எனவும், ஆனால் தமிழக மக்கள் அந்த முயற்சிகளை எளிதில் புரிந்து கொள்ளும் திறமை கொண்டவர்கள் எனவும் கூறினார். பாஜகவுக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதையும் அவர் தெளிவாக சுட்டிக்காட்டினார்.
மறு சீரமைப்பு குறித்து அவர் கூறியதாவது, ஆயிரம் நாடாளுமன்ற இருக்கைகள் தேவை என கூறப்படும் திட்டம் தென் மாநிலங்களை புறக்கணிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான். தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் மிகப்பெரிய அளவில் குறையக்கூடிய நிலை உருவாகும் என்றும், நாடாளுமன்றத்தில் தற்போது 10 நிமிடங்கள் பேசவே சந்தர்ப்பம் இல்லாத நிலையில், 1000 எம்.பிக்கள் வந்துவிட்டால், தமிழகத்தின் குரல் முழுமையாக அழிந்துவிடும் எனக் கூறினார்.
இந்த சூழ்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பாஜக திட்டங்களுக்கு எதிராக கேள்வி எழுப்பாமல், எதிர்மறையான நிலைப்பாட்டில் நடந்து கொள்வது துனிச்சலற்ற செயலாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார். பாஜக மக்களை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்றார்.
மேலும், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு தவிர்த்து வருகிறது என்றும், இது தமிழ்நாட்டின் சமூகநீதி நோக்கங்களை பாதிக்கும் நடவடிக்கையாகும் என அவர் எச்சரித்தார். மத்திய அரசிடம் புள்ளியியல் துறை இருந்தபோதும், கணக்கெடுப்பு செய்ய முடியாதது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார். இதனை உடனடியாக நடத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும், இனியும் தள்ளிப்போடக் கூடாது என்றும் செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.