தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கும் உத்தரவை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் போனஸ் சட்டத்தின் அடிப்படையில் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும். சில சங்கங்களில் உபரித் தொகை இல்லாமலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் படி, குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்கள் பணிபுரியும் சங்கங்கள் போனஸ் சட்டத்தின் கீழ் வராத நிகர லாபம் ஈட்டுகின்றன. அதிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படுவதால் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும். இதனால் ஊழியர்கள் ஆர்வத்துடன், ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் 44,081 ஊழியர்களுக்கு 44 கோடி 11 லட்ச ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது. இதில், தொடக்க சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2,400 ரூபாய் மற்றும் பிற சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் வரை கருணைத் தொகை வழங்கப்படும். இதன் மூலம் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஊழியர்களுக்கு வழிவகை செய்யப்படுகிறது.
முன்னதாக, மத்திய மற்றும் மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், மொத்தமாக 2.69 லட்சம் தொழிலாளர்களுக்கு 376 கோடி ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். குறிப்பாக நிரந்தர ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 8,400 ரூபாய் முதல் அதிகபட்சம் 16,800 ரூபாய் வரை போனஸ் கிடைக்கும் என தெரிகிறது.
#