சென்னை: சென்னை சென்ட்ரல் – டில்லி இடையே, ‘தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்’ சேவை, 1976ல் ஆகஸ்ட் 7ம் தேதி துவங்கியது.வாரத்திற்கு 3 முறை இயக்கப்படும் ரயிலாக அறிமுகம் செய்யப்பட்டது. இது ஜூன் 1988 இல் தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டது.
இந்த ரயில் சேவை ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு நிலைகளில் வளர்ந்தது. தற்போது, இந்த ரயில் நவீன எல்எச்பி பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து டெல்லி வரை 2,182 கி.மீ. இந்த நீண்ட தூர ரயில் 10 நிலையங்களில் நின்று செல்லும்.
இதன் சராசரி பயண நேரம் 33 மணி நேரம். இது பயணிகளுக்கு வசதியான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்குகிறது. இந்நிலையில், இந்த ரயில் இயக்கப்பட்டதன் 48வது ஆண்டு விழா சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு கொண்டாடப்பட்டது.
சென்னை கோட்ட முதுநிலை வணிக மேலாளர், ரயில் நிலைய இயக்குனர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பயணிகள் மற்றும் ரயில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். ரயில் முன் நின்று புகைப்படம் எடுத்தனர். புது தில்லிக்குப் புறப்பட்ட ரயில், ரயில் ஆர்வலர்களால் உற்சாகமாக அனுப்பி வைக்கப்பட்டது.