தேர்வில் தேர்ச்சி பெற்ற காத்திருப்போர் பட்டியலில் உள்ள கால்நடை மருத்துவர்களை நியமனம் செய்வது தொடர்பான அதிகாரி அளவிலான கூட்டம் நாளை நடைபெறும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் அருள்ஜோதி உட்பட, 83 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:-
அரசு கால்நடை மருத்துவமனைகளில், 2012-ல் இருந்து, உதவி கால்நடை டாக்டர்கள் நியமனம் இல்லை. இதனால், காலி பணியிடங்கள், தற்காலிக டாக்டர்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், தற்காலிக கால்நடை மருத்துவர்களை நியமிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்காலிக பணியாளர்கள் பணி நியமனம் கோர முடியாது என்றும், ஆனால், எதிர்காலத்தில் கால்நடை மருத்துவர் நியமனத்தில், போனஸ் மதிப்பெண்கள் எத்தனை ஆண்டுகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்தது.
அவர்கள் ஆண்டுக்கு 5 மதிப்பெண்கள் வீதம் பணிபுரிந்துள்ளனர், மேலும் வயது வரம்பை தளர்த்தியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 731 உதவி கால்நடை மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், விகிதாச்சார அடிப்படையில் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளோம்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 187 தற்காலிக மருத்துவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். தகுதியற்ற 57 மருத்துவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 187 மருத்துவர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதனால் முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ள எங்களுக்கு இதுவரை பணி நியமனம் செய்யப்படவில்லை. எனவே சட்ட விரோதமாக பணிபுரியும் 187 தற்காலிக டாக்டர்களை பணி நீக்கம் செய்து எங்களை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் ஜெ.ரவீந்திரன், மனுதாரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நாளை அதிகாரிகள் அளவிலான கூட்டம் நடைபெறும். அக்கூட்டத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறி விசாரணையை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.