சென்னை: தமிழகத்தில் அதிகாலையில் பரவலாக பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தில் கனமழையைக் கொண்டு வந்த வடகிழக்குப் பருவமழை விடைபெற்றதை அடுத்து பிப்ரவரி மாதமே வெயில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்றும், சென்னையில் அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வறண்ட காற்று ஊடுருவியதே இதற்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பருவநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டாலும் பிப்ரவரியில் மழை பெய்ய வாய்ப்பு குறைவு என்பதால் விவசாயிகள் அச்சமின்றி சம்பா, தாளடி பருவ விவசாயத்தை மேற்கொள்ளலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.