சென்னை: ‘தமிழகம் என்றுமே ஆன்மிகம் தழைத்தோங்கும் புண்ணிய பூமி’ என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:- ராஜேந்திர சோழனின் வீர வரலாற்றின் 1000-வது வெற்றி விழாவில் பங்கேற்கவும், துாத்துக்குடியில் நவீன விமான நிலையம் உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக 26-ம் தேதி இரவு தமிழகம் வந்தார்.
துாத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிய பல வளர்ச்சித் திட்டங்களை அறிமுகப்படுத்திய மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்த நமது பாண்டிய தேசத்தின் மகிமையை அழகான முறையில் விளக்கிய பிரதமரின் வரலாற்று அறிவைக் கண்டு நான் வியந்தேன். இந்திய வரலாற்றில் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தமிழ் மன்னர்கள் மீது அபரிமிதமான அன்பு கொண்ட ஒரே பிரதமர் நரேந்திர மோடி என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் தேவை?
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பு மோடிக்கு உண்டு. நமது மாநிலம் நாத்திகத்தின் கரும்புகையால் சூழப்பட்டு, நமது உண்மையான இயல்பை மறைக்க முயற்சித்தாலும், ‘தமிழ்நாடு ஆன்மீகம் செழித்து வளரும் புனித பூமி’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்த இந்த நிகழ்வின் வெற்றி முற்றிலும் பிரதமருக்கே உரியது. இவ்வாறு கூறப்பட்டது.