சென்னை: தமிழ்நாடு சூப்பர் லீக் (டிஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:- சமீபத்தில், தமிழ்நாடு சூப்பர் லீக் கால்பந்து போட்டி டிஎஸ்எல்-2025 என்ற பெயரில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான தொடக்க விழா கடந்த மாதம் 21-ம் தேதி சென்னை ஆவடியில் உள்ள நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றதாகவும், வேவ்ஸ் எஃப்சி உட்பட 4 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கும் என்றும் தெரியவந்துள்ளது. இந்தப் போட்டியை நடத்துவதற்கு தமிழ்நாடு கால்பந்து சங்கத்தால் எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. போட்டியின் ஏற்பாட்டாளர்கள் மாவட்ட கால்பந்து சங்கத்திடமிருந்தோ அல்லது தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகிகளிடமிருந்தோ இதற்கான முறையான அனுமதியைப் பெறவில்லை.

எனவே, இந்தப் போட்டியை அங்கீகரிக்கப்படாத அல்லது பதிவு செய்யப்படாத கால்பந்து போட்டியாகக் கருத வேண்டும். தமிழ்நாடு கால்பந்து சங்கம் மற்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தில் பதிவுசெய்யப்பட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் அல்லது அதிகாரிகள் இந்த போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை.
அவர்கள் இதுபோன்ற போட்டியில் பங்கேற்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு கால்பந்து சங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.