2024-25ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு தான் மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2024-25ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.17 லட்சத்து 23 ஆயிரத்து 698 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2023-24 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 லட்சத்து 71 ஆயிரத்து 368 கோடியாக இருந்த நிலையில், இப்போது இது 9.69% அதிகரித்து பெரும் உச்சத்தை கண்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முதல் பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதை விட கூடுதலாக 9.69% வளர்ச்சி பெற்று தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.
சேவைகள் துறை அதிகப்பட்சமாக 12.7% வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், மனை வணிகம் 13.6%, தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்பு 13%, வர்த்தகம் பழுது நீக்கல், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்கள் 11.7%, உற்பத்தி 8%, கட்டுமானம் 10.6% வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதே வேளையில், பயிர்த் தொழில் -5.93%, கால்நடை வளர்ப்பு 3.84% என குறைவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளுக்கு, திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டி வரும் நிலையில், இத்தகைய வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது. புதிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கவில்லை. இதேபோல், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த நிலையிலும், தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் உச்சம் தொட்டுள்ளதை பொருளாதார நிபுணர்கள் பாராட்டுகின்றனர்.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பெருமையுடன் பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், 9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக கூறினார். அவர் கூறும் படி, பாலின சமத்துவம் மற்றும் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சியில் கவனம் செலுத்தி இந்த சாதனையை தமிழ்நாடு அடைந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியதாவது, 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.69% ஆகும். இது கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும். 2024-25ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பெயரளவு வளர்ச்சி விகிதம் 14.02% ஆகும், இது மாநிலங்களிலேயே மிக உயர்ந்ததாகும்.