சென்னை: முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன், “தமிழக அரசியலில் அடுத்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையேயே முக்கியமான போட்டி நடைபெறும். அடுத்த நிலைக்கு விஜய் மற்றும் சீமான் போட்டி போட்டுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு அருகே மூவரசம்பட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட அவர், பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். விழாக்கள் மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ளன என்றார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்காதது தவறு என்றும், இது மக்களின் நம்பிக்கையை புறக்கணிப்பதாகும் என்றும் கடுமையாக விமர்சித்தார். மேலும், “மக்களின் மனுக்கள் ஆற்றில் மிதக்கின்றன; ஆனால் அரசு தீர்வு காணவில்லை” என்றும் குற்றம்சாட்டினார்.
தமிழிசை தொடர்ந்து, “மக்கள் பிரச்சனையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு பல திட்டங்களை செய்து வருகிறது. மோடி அரசு சாலை, ரயில் வசதி போன்றவற்றை வழங்கி வருகிறது. இவற்றை மறைத்து விமர்சிப்பது உண்மையல்ல. அதிமுக-பாஜக கூட்டணி தான் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விஜயின் அரசியல் குறித்து அவர், “விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கலாம். ஆனால் வெற்றி பெறும் அளவுக்கு மாற்றுச் சிந்தனை அவர் காட்டவில்லை. பெரியார், அண்ணா, எம்ஜிஆர், விஜயகாந்த் ஆகியோரின் சிந்தனையை மட்டுமே சேர்த்துள்ளார். அதில் புதுமை இல்லை. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி போட்டிதான் முக்கியம்; அடுத்த இடத்துக்கே விஜய், சீமான் போட்டியாக இருப்பார்கள்” என தெரிவித்தார்.