கோவை: கோவை, அவிநாசி ரோடு மேம்பாலத்தில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. லாரியில் இருந்து தொடர்ந்து எரிவாயு வெளியேறி வருகிறது. டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
கோவை, அவிநாசி ரோடு மேம்பாலத்தில் இன்று (ஜன.,03) அதிகாலை சென்ற டேங்கர் லாரி, வளைவில் திரும்ப முடியாமல் கவிழ்ந்தது. லாரியில் இருந்த புல்லட் டேங்கர், தனியாக பிரிந்து மேம்பாலத்தில் உருண்டது. இந்த அதிர்வில் புல்லட் டேங்கரில் இருந்து சமையல் எரிவாயு கசிய தொடங்கியது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்தனர்.
டேங்கர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து எரிவாயு கசிவை தீயணைப்பு படையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர். டேங்கர் லாரியை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பனி மூட்டம் காரணமாக, லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்த போலீசார் மாற்று வழியில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். டேங்கரில் இருந்து தொடர்ந்து எரிவாயு வெளியேறி வருவதால், அப்பகுதியில் இருப்போர் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக கோவை மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.