சென்னை: தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தமழக வெற்றி கழகம் (தவெக) திகழ்கிறது என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இத்தகவலை அவர் காணொளி மூலம் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற தவெக தகவல் தொழில் நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டத்தில், நிகழ்வில் நேரில் பங்கேற்க முடியாத நிலையால், விஜய் தனது உரையை முன்கூட்டியே பதிவு செய்து அனுப்பியிருந்தார். இந்த காணொளி கூட்டத்தில் ஒளிபரப்பப்பட்டது.
விழாவில் அவர் தெரிவித்ததாவது: “இந்த கூட்டம் நடக்கும் நேரத்திலேயே நேரில் உங்களைச் சந்தித்து பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் நெட்வொர்க் பிரச்சனை காரணமாக நேரலையில் பேச முடியவில்லை. அதனால்தான் இந்த வீடியோ மெசேஜ் மூலம் உங்களை சந்திக்கிறேன். இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.”
தொடர்ந்து அவர் கூறியதாவது: “நம்முடைய கட்சி, குறிப்பாக சோஷியல் மீடியா பிரிவு இந்தியாவிலேயே மிகப்பெரிய இயக்கமாக வளர்ந்திருக்கிறது. இது நம்மால் சொல்லி புகழ வேண்டிய விஷயம் அல்ல. மற்றவர்கள் இதைப் பார்த்து உணர்ந்து சொல்லுகிறார்கள். இது மிகப் பெரிய பெருமை.”
“நீங்கள் இனி ரசிகர்கள் மட்டுமல்ல. தற்போது நீங்கள் ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ என்று அழைக்கத்தக்க நிலைக்கு வந்துள்ளீர்கள். உங்கள் ஒவ்வொரு செயலும் மரியாதையோடும், கண்ணியத்தோடும் இருக்க வேண்டும். உங்கள் நேர்த்தியான செயல்பாடுகள் தான் கட்சியின் முகமாக மாறும். அதனால் ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு பதிவுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்,” என விஜய் வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில், “இன்றைய இளைஞர்கள் சமூக ஊடகங்களிலேயே அதிக நேரம் செலவழிக்கிறார்கள். அதனால் சமூக ஊடகங்களை நேர்மையான தகவல்களை பகிரும் மேடையாக மாற்ற வேண்டும். தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் வேலை மிக முக்கியமானது.”
தலைவர் விஜயின் இந்த உரை, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சமூக ஊடகத்தின் தாக்கம், அதன் பயன்படுத்தும் வழிகள் மற்றும் கட்சிக்கான தாக்கத்தைப் புரிய வைக்கும் விதத்தில் அவரது உரை அமைந்திருந்தது.
இவ்வாறு தலைவர் விஜய் தனது காணொளி உரையின் மூலம் தெரிவித்தார்.