சென்னை: பசுமை வழித்தடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால், 40 நிமிடம் பயணிகள் சிரமப்பட்டனர். சென்னையில், விமான நிலையம் – விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

தூரம் 54 கி.மீ. இந்த ரயில்களில் தினமும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். மேலும், இந்த நேரங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை (பசுமை பாதை) வழித்தடத்தில் நேற்று காலை 9 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மெட்ரோ ரயில் நிறுவன பொறியாளர்கள் உடனடியாக தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். பொறியாளர்கள் சுமார் 40 நிமிடம் போராடி தொழில்நுட்ப கோளாறை சரி செய்தனர். இதையடுத்து நேற்று காலை 9.40 மணி முதல் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கின. ஒரு வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.