சென்னை: மத்திய அரசின் பொது கொள்முதல் கொள்கையின்படி, பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்து மொத்த ஆண்டு கொள்முதலில் 25 சதவீதத்தை வாங்க வேண்டும். இதில், 4 சதவீதம் எஸ்சி மற்றும் எஸ்டி தொழில்முனைவோரிடமும், 3 சதவீதம் பெண்கள் தலைமையிலான நிறுவனங்களிடமிருந்தும் வாங்க வேண்டும். அதன்படி, பொதுத்துறை நிறுவனங்கள், ‘ஜெம் போர்டல்’ மூலம் பொருட்களை வாங்க டெண்டர்களை அழைக்கின்றன.
இந்த போர்டலில் பதிவு செய்வதில் உள்ள சிரமங்களால், பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருட்களை விற்க முடியாமல் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தீர்வு காண, சென்னையில் ஜெம் போர்டல் அலுவலகம் திறக்க வேண்டும் என சிறு தொழில் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: மத்திய அரசின் திட்ட பலன்களை பெற, ஆன்லைனில் விண்ணப்பிப்பது உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை வரவேற்கிறோம்.

அதே சமயம், அதில் ஏற்படும் பிரச்னைகளை விரைவில் தீர்க்க வேண்டும்.பல சிறு நிறுவனங்களுக்கு, ‘ஜெம் போர்டலில்’ பதிவு செய்ய தெரியவில்லை. ஆதார் எண், பான் எண் சரியாக இருந்தாலும், சில சமயங்களில், யாருடன் தொடர்புகொள்வது என தெரியாமல், தொழில்நுட்ப பிரச்னையால் தீர்வு காண்பதில்லை. ஒரு நிறுவனம் எந்தெந்த பொருட்களை உற்பத்தி செய்கிறது என்ற விவரங்கள் அடங்கிய அட்டவணையை எப்படி உருவாக்குவது என்பது பலருக்குத் தெரியாது.
எனவே, ‘ஜெம் போர்டல்’ தொடர்பான பிரச்னைகளை தீர்க்க, மத்திய அரசு, சென்னையில் தனது அலுவலகத்தை அமைக்க வேண்டும். இது தவிர, தொழில்முனைவோருக்கு பதிவு, டெண்டர்களில் பங்கேற்பது போன்றவற்றில் பயிற்சி அளிக்க, மாவட்டங்களில் உதவி மையங்கள் அமைக்க வேண்டும்,” என்றனர்.