சென்னை: சென்னையில் காலையில் பனிமூட்டம் இருக்கும். தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. தென் தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும். காலையில் லேசான மூடுபனி பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (04-03-2025) முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். காலையில் லேசான மூடுபனி பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் 7-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து 2 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கலாம். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (02-03-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் பொதுவாக லேசான மூடுபனி இருக்கும்.
அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸாகவும் இருக்கலாம். மாலத்தீவு – லட்சத்தீவு பகுதிகள், அதை ஒட்டிய குமரி கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இன்று (03-03-2025) அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், நாளை முதல் 7-ம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.