சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில், 1,614 டீசல் பஸ்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நீட்டிக்கப்பட்டு, முடிவடைந்துள்ளது. ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே டெண்டரில் பங்கேற்றதால், விரைவில் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பஸ்களை கொள்முதல் செய்ய, ஜெர்மன் மேம்பாட்டு வங்கியான கேஎப்டபிள்யூ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் நிதியுதவி மூலம், குளிரூட்டும் வசதி இல்லாத 1,614 புதிய பிஎஸ்6 டீசல் பேருந்துகள் வாங்கப்படும். இதில், மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 245, விழுப்புரம் கோட்டத்துக்கு 347, சேலம், கும்பகோணம் கோட்டத்துக்கு தலா 303, கோவை கோட்டத்துக்கு 115, மதுரை கோட்டத்துக்கு 251, நெல்லை கோட்டத்துக்கு 50 பஸ்கள் வழங்கப்படும்.

இது தொடர்பான டெண்டர் கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்டு, டிசம்பர் 2ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.காலக்கெடு நீட்டிக்கப்பட்டதையடுத்து, டெண்டருக்கான காலக்கெடு முடிந்தது. இதில், சமீப காலமாக போக்குவரத்து கழகத்துக்கு அதிக அளவில் பஸ்களை தயாரித்து சப்ளை செய்து வரும் ஒரே ஒரு நிறுவனம் மட்டும் பங்கேற்றுள்ளது. விண்ணப்பத்தை தொடர்ந்து பரிசீலனை செய்து விரைவில் உத்தரவு பிறப்பிப்போம்.
உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு மாதத்தில் பேருந்துகள் சப்ளை செய்யும் பணி தொடங்கும். மேலும், மாதத்திற்கு குறைந்தது 300 பேருந்துகள் பெறப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பேருந்துகளும் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.