தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணிக்குள் தனது பங்கினை உறுதி செய்ய வலியுறுத்தி வருகிறது. 2021 தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரலில் அவையின் காலம் நிறைவடைகிறது. இதையொட்டி, அரசியல் சூழல் சூடுபிடித்து வரும் நிலையில் காங்கிரஸ் தரப்பின் கோரிக்கை புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

திமுக தனது ஆட்சியை தொடர தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. இந்நிலையில், தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ், கூட்டணிகளின் மூலமாகவே தாக்கத்தை செலுத்தி வருகின்றன. ஆனால், காங்கிரஸ் தனது பங்கு குறைவாக இருப்பதாக அடிக்கடி அதிருப்தி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தரவு ஆய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. தொண்டர்கள் அனைவரும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் எனக் கேட்கின்றனர். இது தவறல்ல, அவர்களது உரிமைதான். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக காங்கிரஸ் பங்கு கேட்கும்,” எனத் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்கு தமிழகத்தில் எந்த பங்கும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவரது இந்த வலியுறுத்தல்கள் திமுக கூட்டணிக்குள் புதிய பதற்றத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. காங்கிரஸுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படுமா அல்லது திமுக தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துமா என்பது முக்கிய கேள்வியாகியுள்ளது. வரவிருக்கும் 2026 தேர்தலில் காங்கிரஸின் இந்த அதிகார பங்கு கோரிக்கை, கூட்டணியின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணி என அரசியல் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.