எல்2 எம்புரான் திரைப்படம் மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிருத்விராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவான இந்த திரைப்படம் மிக விரைவாக 200 கோடி ரூபாய் வசூலித்த முதல் மலையாள திரைப்படமாக பெருமையைப் பெற்றது. இதில் முல்லை பெரியாறு தொடர்பான காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால், 24 காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டு, மறு தணிகையைப் பெற்ற பிறகு கடந்த 2 நாட்களாக திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் கேரளா மட்டுமல்ல, தமிழகத்தில் கூட நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், எம்புரான் படத்தை தயாரித்த கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் நேற்று அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி அதனை பெரும் விவாதமாக்கியது. இந்த சோதனை சென்னை, கோழிக்கோடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெறுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும், கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள், நிறுவனம் மற்றும் பட தயாரிப்பாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன.
தொடர்ந்து, எல்2 எம்புரான் படத்தின் இயக்குனரும் நடிகருமான பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது படத்தின் தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனின் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனையின் பின்னணியுடன் தொடர்புடையதாக தெரிகிறது.