தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பாக நடிகர் விஜய் தலைமையில் நடத்தப்படும் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ள நிலையில், அதன் ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், விழா வெகு விமர்சையாக அமையும் என எதிர்பார்க்கும் தருணத்தில், தொடர்ச்சியாக எதிர்மறை சம்பவங்கள் நிகழ்ந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாநாட்டை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பேனர், போஸ்டர் அலங்கார வேலைகள் முழுவேகத்தில் நடைபெற்று வந்தன. இந்நிலையில், திருவில்லிபுத்தூரில் 19 வயது இளைஞர் காளீஸ்வரன் பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தது, மாநாட்டை சூழ்ந்த சோகமான தொடக்கமாக அமைந்தது. அதில் சில மணி நேரத்திற்குள் மேலும் ஒரு சோதனை; மாநாட்டு திடலில் விஜய் கொடியேற்றம் செய்ய 100 அடி உயர கம்பம் நிறுவப்பட்டு, சில நிமிடங்களிலேயே அது எதிர்பாராத வகையில் கீழே விழுந்தது.
இந்த விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடியது எனாலும், அதிர்ஷ்டவசமாக மக்கள் மீது விழாமல், அருகில் இருந்த காரின் மீது விழுந்தது. கார் முற்றிலும் சேதமடைந்தது, ஆனால் உள்ளே யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இது போன்ற நிகழ்வுகள் தவெகவினர் மற்றும் பொதுமக்களில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மாநாட்டிற்கு தேவையான ஒன்றரை லட்சம் சேர்கள் வழங்க ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் கடைசி நேரத்தில் விலகியதால், புதிய ஏற்பாடாக கேரளாவிலிருந்து சேர்கள் கொண்டுவர முயற்சிகள் தொடங்கியுள்ளன. இது போன்ற சிக்கல்கள், விஜய் மற்றும் அவரது கட்சி எதிர்கொள்ளும் திட்டமிடல் சவால்களை வெளிக்கொணர்கின்றன. ஆனாலும், இந்த தடைகளையும் மீறி மாநாடு வெற்றிகரமாக நடைபெறும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.