சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேரம் சூடுபிடித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் ஒரு சட்டமன்றத் தொகுதி” என்ற அடிப்படையில் பாஜகவுக்கு 39 சீட்டுகளும், சிறிய கட்சிகளுக்கு 11 சீட்டுகளும் என மொத்தம் 50 தொகுதிகள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுக்கு 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என திட்டவட்டமாகக் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த தேர்தல்களில் அடித்தட்டில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த எடப்பாடி, இந்த முறை வெற்றி பெறவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். அதேசமயம் திமுக கூட்டணி பலம் அதிகமாக உள்ளதால் அதனை எதிர்கொள்ள வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், சேலத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் எடப்பாடி – நயினார் இடையே சீட்டுப் பேரம் குறித்த ஆலோசனை சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. பாஜகவினர், கடந்த மக்களவைத் தேர்தலில் இரண்டாம் இடத்தில் வந்த பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு அந்தத் தொகுதிகளில் உள்ள சட்டமன்ற இடங்களை கோரியதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், எடப்பாடியும் பாஜகவுக்கு ஒதுக்கவேண்டிய தொகுதிகள் பற்றிய தனிப்பட்ட பட்டியலை வைத்திருந்ததாகத் தெரிகிறது.
இறுதியில், 50 தொகுதிகளை கேட்ட பாஜகவுக்கு, எடப்பாடி 25 தொகுதிகளை வழங்க ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது முதல்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே; அடுத்தடுத்த கட்டங்களில் மேலும் விவாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தமிழகம் வரும்போது இந்த விவகாரம் இறுதி செய்யப்படலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.