48-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் அமெரிக்கன் சென்டர் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை அமெரிக்க நடப்பு துணைத் தூதர் க்வென்டோலின் லெவெல்லின் இன்று திறந்து வைத்தார். சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த புத்தகக் கண்காட்சி ஜனவரி 12, 2025 வரை நடைபெறவுள்ளது.
அமெரிக்கன் சென்டர் அரங்கில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் பொது மக்களுக்காக பல்வேறு நூல்களும், மின்-வள ஆதாரங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அமெரிக்காவில் கல்வி மற்றும் பரிமாற்ற வாய்ப்புகள் குறித்த தகவல்களும் அறிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு வருகை தருபவர்கள் தள்ளுபடி கட்டணத்தில் உறுப்பினராகும் வாய்ப்பையும் பெறலாம்.
திறந்தவிழா நிகழ்ச்சியில் உரையாற்றிய அமெரிக்க துணைத் தூதர், அமெரிக்கன் சென்டர் அரங்கு புதுமையான புரிதல் மற்றும் உலகளாவிய மாற்றங்களை உருவாக்க உதவுவதாக உள்ளது என தெரிவித்தார். மேலும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், அறிவு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் இம்மாதிரிக் கண்காட்சிகள் முக்கியமானவை எனவும் அவர் கூறினார்.
சென்னையில் உள்ள அமெரிக்கன் சென்டரின் நூலகம் 15,000-க்கும் மேற்பட்ட நூல்களையும், மல்டிமீடியா வளங்களையும் கொண்டுள்ளது. இங்கு கிடைக்கும் eLibraryUSA டிஜிட்டல் நூலகம் பல தகவல் தளங்களுக்கான அணுகலை வழங்குகிறது.
900-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் உள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு காத்திருக்கின்றன.