சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் தேர்ச்சி பெற்ற 1,231 பேருக்கு கிராம சுகாதாரச் செவிலியர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 2,417 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அவர் அறிவித்தார். இதனால் தமிழகத்தில் கிராமப்புற, நகர்ப்புற சுகாதார சேவைகள் வலுப்பெறவுள்ளன.

தற்போது மாநிலத்தில் 8713 கிராம சுகாதார நிலையங்களும், 2368 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களில் கிராம சுகாதார செவிலியர்கள் தாய்-சேய் நல சேவைகள், தடுப்பூசி பணிகள், குடும்ப நலத் திட்டங்கள், சிறுநோய்கள் சிகிச்சை போன்ற முக்கிய பணிகளை மேற்கொள்கின்றனர். துணை செவிலியர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல், பிரசவ சேவைகள் மற்றும் முதலுதவி பணிகளைச் செய்கின்றனர்.
காலியாக இருந்த செவிலியர் பணியிடங்கள் உச்சநீதிமன்ற வழக்கில் ஏற்பட்ட தடையால் நிரப்பப்படாமல் இருந்தன. தற்போது அந்த வழிகாட்டுதலின்படி, 25 ஜூலை 2023க்குள் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள காலிப் பணியிடங்கள் MRB மூலம் சீக்கிரம் நிரப்பப்பட உள்ளன.
செவிலியர் நியமன ஆணைகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, மருத்துவ சங்கங்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தன. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்த முதல்வர் ஸ்டாலின், “1,231 செவிலியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர், மேலும் 2,417 காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்” என்று குறிப்பிட்டார். இதனால் மருத்துவ சேவைகள் பொதுமக்கள் நலனுக்காக இன்னும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.