வங்கதேசத்தைச் சேர்ந்த சயன் என்ற நபர், 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து திருப்பூரில் குடியேறிய விவாரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வந்த பிறகு, சயன் திருப்பூரைச் சேர்ந்த கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெற்று வீடுகளை கட்டி வாடகைக்கு விடத் தொடங்கினார். ஆனால், உடல் நலக்குறைவால் தவணைகளை செலுத்த முடியாமல் போனதால், அந்த வீடுகள் தனியார் நிறுவனத்தால் சீல் வைக்கப்பட்டன.
அந்த வீடுகளில் வசித்தவர்கள் போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், சயன் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும், சயன் தனது மனைவியின் பெயரில் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களை பெற்றதாகவும், இந்தியக் குடியுரிமை பெற 15 லட்சம் ரூபாய் செலவு செய்தும் அது சாத்தியமாகவில்லை எனவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.