வேடந்தாங்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெய்து வரும் கனமழையால் பறவைகள் சரணாலய ஏரி நிரம்பியுள்ளதால், சரணாலயத்திற்கு வரும் வலசை பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து சீசன் துவங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் கிராமத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏக்கர் ஏரியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் சீசன் தொடங்கும். இதைத்தொடர்ந்து ஏராளமான பறவைகள் சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்துக்காக வந்து, ஏரியில் உள்ள மரங்களில் கூடு கட்டி, முட்டையிட்டு, இனப்பெருக்கம் செய்கின்றன. மேலும், பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் தாயகம் திரும்புவது வழக்கம்.
சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பறவை ஆர்வலர்கள் என ஏராளமானோர் வந்து ஏரியில் தங்கியிருக்கும் பறவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், வேடந்தாங்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் போதிய மழை பெய்யாததால், சரணாலயம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல், சிறிதளவு தண்ணீர் வந்தது. இதனால், நவம்பர் மாதத்தில் பறவைகள் குறைந்த எண்ணிக்கையில் வந்தன.
தற்போது ஃபென்சல் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் வேடந்தாங்கல், வெள்ளபுத்தூர் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரத்து அதிகரித்து, 16 அடி கொள்ளளவு கொண்ட ஏரி முழுமையாக நிரம்பியுள்ளது. மேலும், ஏரியில் இருந்து உபரி நீர் கசிவுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஏரி நிரம்பி அழகாக காட்சியளிப்பதால், புலம்பெயர்ந்த பறவைகள் சரணாலயத்திற்கு திரும்பி வருகின்றன. ஆஸ்திரேலியா, சைபீரியா, இலங்கை, நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வந்துள்ளன.
இதில் கரண்டிவாயன், நீர்வாத்து, கூழைக்கடா, பாம்புத்தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், நீர்காகம் , மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, புள்ளி மூக்கு வாத்து, வக்கா உட்பட பல்வேறு பறவைகள் வந்துள்ளன. மேலும், மரக்கிளைகளில் கூடு கட்ட துவங்கியுள்ளதால் பறவை சீசன் துவங்கியுள்ளதாக அப்பகுதி கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வேடந்தாங்கல் கிராம மக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் கூறியதாவது:-
கனமழையால் ஏரி நிரம்பியுள்ளது. பறவைகளுக்கு நிறைய உணவு கிடைக்கிறது. இதனால் சரணாலய ஏரிக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மரக்கிளைகளில் கூடு கட்ட ஆரம்பித்து விட்டதால், உணவுக்காக வெளியே சென்று மீண்டும் கூடுகளுக்கு வந்து விடுகின்றன. இதனால் ஏரியில் அவ்வப்போது பறவைகள் தென்படுவதால் சீசன் துவங்கியுள்ளதாக நம்புகிறோம்.
மேலும், பறவைகளை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தின்பண்டங்கள் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள், வருமானம் கிடைக்கும் என மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படாததால், தமிழக அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, வேடந்தாங்கல் சரணாலய வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- சரணாலய ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. இதனால், சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் ஏரியில் குடியேறியுள்ளதால், சீசன் துவங்கியுள்ளது. வரும் நாட்களில் பறவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். சரணாலயத்தில் அதிக அளவில் பறவைகள் இருப்பதால், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். ஏரியை சுற்றி காவலர்கள் மூலம் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.