திருச்சி: பாஜகவின் வளர்ச்சிக்கு மற்ற கட்சிகளின் வீழ்ச்சி காரணமல்ல என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். நேற்று திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சி.யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அமெரிக்க அதிபர் இந்தியா மீது உலகிலேயே அதிக வரியை விதித்துள்ளார். அமெரிக்க அதிபர் வரி பயங்கரவாதத்தை கையில் எடுத்ததால் அவரது மரியாதை குறைந்துள்ளது.
அதிக வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக பிரதமர் மோடி 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் இருந்து 160 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குகிறோம். இதில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு வரி வருவாய் அமெரிக்காவிற்கு செல்கிறது.

எனவே, ஆன்லைனில் பொருட்களை வாங்காமல், கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்க வேண்டும். அதுவும், நாம் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும். செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கிறார். அவரது உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். ஒற்றுமை மட்டுமே பலனைத் தரும். செங்கோட்டையனின் கோரிக்கை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.
அனைவரும் பேசினால், எல்லாம் சரியாகிவிடும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் பரவாயில்லை. 2021 தேர்தலில் பெற்றதை விட 2024 தேர்தலில் திமுக கூட்டணி 8 சதவீதம் குறைவான வாக்குகளைப் பெற்றது. இது மேலும் குறைந்தால், திமுக கதை முடிந்துவிடும். மற்ற கட்சிகளின் வீழ்ச்சியால் பாஜக வளரவில்லை. பாஜகவின் சித்தாந்தம், மத்திய அரசின் திட்டம் மற்றும் எங்கள் கடின உழைப்பால் பாஜக வளர்ந்து வருகிறது என்று அவர் கூறினார்.