கூடலூர்: கூடலூர் கோக்கால் அருகே நிலம் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதியில் மத்திய புவியியல் துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் 20 நாட்கள் அங்கு தங்கியிருந்து விசாரணை நடத்துவார்கள்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் கோக்கால் பகுதியில் கடந்த ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையில் ஒன்றரை சென்ட் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் முதியோர் இல்ல கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தன. அந்த விரிசல் நாளுக்கு நாள் விரிவடைகிறது.
கடந்த வாரம், மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், சென்னையில் இருந்து மத்திய புவியியல் துறை அதிகாரிகள் இருவர் இன்று (புதன்கிழமை) கூடலூருக்கு வந்தனர்.
கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வுக் குழுவினர், “தரை, கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இன்று தொடங்கி 20 நாட்களுக்கு ஆய்வுப் பணி நடைபெறும்” என்றார்.