திருப்பூர்: இந்தியாவில் செயற்கை நூல், தொழில்நுட்ப ஆடைகள் மற்றும் விளையாட்டு உடைகள் உற்பத்தி விரைவில் மேம்படும் என மத்திய ஜவுளித்துறை செயலர் ரச்சனா ஷா தெரிவித்தார்.
மத்திய ஜவுளித்துறை செயலாளர் ரச்சனா ஷா, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் நேற்று ஏற்றுமதியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், ஜவுளித் துறை இணைச் செயலர் ராஜீவ் சக்சேனா, ஏஇபிசி தென் மண்டலத் தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் கே.எம்.சுப்பிரமணியம், செயலர் திருக்குமரன், இணைச் செயலர் குமார் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மத்திய ஜவுளித்துறை செயலர் ரச்சனா ஷா பேசியதாவது: பின்னலாடை தொழிலால் திருப்பூர் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. திருப்பூர் பின்னலாடை தொழிலில் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆடை உற்பத்தி, பசுமை ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி செயல்படுகிறது. உலகளவில் ஆடை நுகர்வோரின் தேவையை அறிந்து, பசுமை உற்பத்தியில் திருப்பூர் ஈடுபட்டுள்ளது. இதற்கு அரசும் துணை நிற்கிறது.
பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற பல்வேறு விஷயங்கள் ஜவுளித் தொழிலின் முக்கிய அம்சங்களாகும். திருப்பூர் கிளஸ்டரில் இருந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும்.
80 சதவீத பெண் தொழிலாளர்கள் பணிபுரிவதால், அவர்கள் பொருளாதார ரீதியாக வலுவடைந்துள்ளனர். இந்தியாவில் ஏற்கனவே பருத்தி, சணல், பட்டு, செயற்கை இழைகள் போன்றவை அதிகம் உள்ளன.
உற்பத்தி மானியத் திட்டம் (PL2) மூலம் செயற்கை இழைகள், தொழில்நுட்ப ஆடைகள் மற்றும் விளையாட்டு ஆடைகள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். ஜவுளிப் பிரச்சனைகள் தீரும். ஏற்றுமதி வளர்ச்சிக்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.