தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கி.மீ.) லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை பதிவின்படி, அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, தக்கலை, அணைக்கிடங்கு, மாம்பழத்துறையாறு, தேனி மாவட்டம் சோத்துப்பாறை, கோவை மாவட்டம் வால்பாறை கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி, தேன்கனிக்கோட்டை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக ஒரு செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.