சென்னை: சென்னை தரமணியில் உலக வங்கியின் சார்பாக அமைக்கப்பட்ட நவீன உலகளாவிய வணிக மையத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 70 அதிகாரிகள் கொண்ட ஒரு சிறிய குழுவுடன் 2001-ம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை உலகளாவிய வணிக மையம், செப்டம்பர் 2006-ல் முத்தம்மாழிஞர் கலைஞர் அவர்களால் விரிவுபடுத்தப்பட்டு தரமணியில் திறந்து வைக்கப்பட்டது.
இது இப்போது மார்ச் 2025 நிலவரப்படி உலகளவில் 130-க்கும் மேற்பட்ட உலக வங்கி அலுவலகங்கள் மூலம் 189 உறுப்பினர் நாடுகளுக்கு சேவை செய்யும் ஒரு பெரிய உலகளாவிய மையமாக வளர்ந்துள்ளது. திறமையான குழு, வலுவான உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டாளர் நட்பு மேலாண்மை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட தீவிர உலகளாவிய தேடலுக்குப் பிறகு, உலக வங்கி குழுவால் சென்னை மையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆண்டுகளில், அதன் தமிழ்நாடு ஊழியர்களின் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் மீள்தன்மை மூலம், சென்னை குளோபல் பிசினஸ் சென்டர் பல உலக வங்கி குழும செயல்பாடுகளை ஆதரிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தரமணி மையம் புதிய ஒத்துழைப்பு மண்டலங்கள் மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்புடன் கூடிய அதிநவீன வசதியை வழங்குகிறது. உலக வங்கி குழுமத்தின் முக்கிய செயல்பாடுகளை ஆதரிப்பதில் சென்னை குளோபல் பிசினஸ் சென்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. LEED பிளாட்டினம் சான்றிதழ் மூலம் காலநிலை மீள்தன்மையை ஆதரிப்பதில் சூரிய சக்தி மற்றும் மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட வசதிகளையும் இந்த மையம் கொண்டுள்ளது.
நிதி, கணக்கியல், கொள்முதல், நிர்வாகம், அறிவு மேலாண்மை, கருவூலம், மனிதவளம், இடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அத்தியாவசிய நிறுவன சேவைகளை மையம் தொடர்ந்து வழங்கும். இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன், டாக்டர் கனிமொழி சோமு, சட்டமன்ற உறுப்பினர் அசன் மௌலானா, மத்திய அமைச்சரவை செயலாளர் டாக்டர் டி.வி. சோமநாதன், தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் வெண்காய் ஜாங், இந்தியாவிற்கான உலக வங்கியின் இயக்குநர் அகஸ்டே டானோ கோம், சென்னை மையத் தலைவர் சுனில் குமார், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத் துறை செயலாளர் வி. அருண்ராய், உலக வங்கியின் மூத்த அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.