கரூர் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் 41 பேரின் உயிரை பலிகொண்டது. அந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அவர் நேற்று சம்பவ இடத்தையும் மருத்துவமனைகளையும் பார்வையிட்டு, இன்று பாதிக்கப்பட்டோரின் உறவினர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
அந்த நேரத்தில், ஏமூர் புதூரைச் சேர்ந்த சக்திவேல், “விஜய் கூட்டத்தில் காணவில்லை என்று அறிவித்த 14 வயது சிறுமி என் மகள் தாரணிகாதான்” என்று கண்கலங்கி தெரிவித்தார். “என் மனைவியும் மகளும் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றனர். கூட்ட நெரிசலில் என் மகளும், தேடிச்சென்ற மனைவியும் விழுந்துவிட்டனர். அனைவரும் தங்களது உயிரைக் காப்பாற்ற ஓட, என் மனைவியும் மகளும் மிதிபட்டனர்” என்று கதறினார்.

சக்திவேல் தொடர்ந்து, “என் மகளுக்கு விஜய் மீது அதிகமான பற்று. அவரைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தாயுடன் சென்றார். ஆனால் இன்று அவர்களிருவரும் உயிரிழந்துவிட்டனர். இது யாருக்கும் நேரக் கூடாது” என நெஞ்சை உலுக்கும் வார்த்தைகளில் உருக்கமாகப் பேசினார். சக்திவேலின் மனைவி பிரியதர்ஷினியும், மகள் தாரணிகாவும் உயிரிழந்த நிலையில், ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு 9 வயது மகள் நிதிகாவை இழந்த சக்திவேல், தற்போது குடும்பத்தையே இழந்த வேதனையில் மூழ்கியுள்ளார்.
அருணா ஜெகதீசன், “விஜய் மைக்கில் குழந்தையின் பெயரை அறிவித்திருந்தால், அவள் உயிருடன் இருந்தால் உடனே பதிலளித்திருப்பாள். ஆனால் அது நிகழவில்லை என்பது மிகுந்த துயரமானது” எனக் குறிப்பிட்டார். தவெக நிர்வாகிகள் டெம்போவில் அழைத்துச் சென்றவர்கள் பாதுகாப்பாக திரும்பியதா, எத்தனை பேர் சென்றார்கள், எத்தனை பேர் உயிருடன் வந்தார்கள் என்ற விவரங்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.