சென்னை: நம் நாட்டில் உள்ள ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் கல்விப் படிப்புகளில் சேர, தேசிய பொது நுழைவுத் தேர்வில் (NCET) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி கணினி மூலம் நடத்தப்படும்.
இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 20-ம் தேதி முதல் நடந்து வருகிறது.இதற்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று (மார்ச் 31) இரவு 9 மணியுடன் முடிவடைகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://exams.nta.ac.in/NCET/ என்ற இணையதளத்தின் மூலம் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின், 011-4075 9000 அல்லது ncet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தெளிவுபடுத்தலாம் என NTA தெரிவித்துள்ளது. இதேபோல், மத்திய பயோடெக்னாலஜி துறையின் JRF ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்பிற்கான PET தகுதித் தேர்வை NTA ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிஇடி தகுதித் தேர்வு மே 13-ம் தேதி கணினி மூலம் நடத்தப்படுகிறது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிந்தது. விண்ணப்பங்களில் திருத்தங்களைத் தொடர NTA இப்போது வாய்ப்பளித்துள்ளது. இதையடுத்து, தேவைப்படுவோர் https://dbt2025.ntaonline.in/ என்ற இணையதளம் மூலம் இன்றைக்குள் திருத்தம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.