தமிழகத்தில் தி.மு.க. அரசு எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்வதாக மார்தட்டிக்கொண்டு வெற்று விளம்பர மாடலாக செயல்படுகிறது. ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளை மட்டும் புறக்கணிப்பது ஏன்? என தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு, முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊதிய முரண்பாடுகள் களைதல், பணி உயர்வு கோருதல், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், MRB செவிலியர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் கணினி உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை புறக்கணித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை கெஞ்சிக் கூத்தாடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் அறிக்கையில் 309ஆவது வாக்குறுதியாக வெளியிட்டு, நம்பிக்கை ஏற்படுத்திய தி.மு.க. அரசு, இப்போது அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை ஏமாற்றிவிட்டதாக அவர் குறித்துள்ளார்.
அத்துடன், விடுமுறை நாளான இன்றுகூட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டக் களத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. அரசுக்கு இது ஒரு பொருட்டாகவே படவில்லை என்பதும் வெளிப்படையாக தெரியவந்துவிட்டது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறி, தி.மு.க. அரசு பாராமுகமாக செயல்படுவதாக விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். இது அரசியல்வாதிகள் மீதான மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழக்க செய்யும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இவ்வளவு நாளும் அமைதியாக இருந்த அரசு ஊழியர்கள், தி.மு.க. அரசின் வெறுப்பணுகுமுறையால் தற்போது போராட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு தவெக சார்பில் முழு ஆதரவை தெரிவித்துக்கொள்வதாக விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்.