சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று (ஜூலை 30) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் சென்னை அசோக் நகர் 19வது அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். லிப்ரா புரொடக்ஷன் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் அவர், 2020ல் நகராட்சி திடக்கழிவை ஆற்றலாக மாற்றும் புதிய சுற்றுச்சூழல் திட்டத்தில் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர் பாலாஜியிடம் கேட்டு 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட தொழிலதிபர் பாலாஜி, திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ரவீந்தர் சந்திரசேகரன், 16 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரின் அடிப்படையில், அசோக் நகரில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.