சென்னை: ”தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு 5 மாதங்களுக்கு மேலாகியும் 674 தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. நீண்ட நடைமுறைகளுக்குப் பின் தேர்வு செய்யப்பட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளித்து பணியில் சேர்க்காமல் மனித வளத்தை வீணடிப்பது நியாயமில்லை. தமிழக காவல்துறைக்கு 2599 இரண்டாம் நிலை காவலர்கள், 86 சிறைக்காவலர்கள், 674 தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 3359 பேர் தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2023 ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்பட்டது.
போட்டித் தேர்வு, உடற்தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்குப் பிறகு, அவர்களைத் தேர்வு செய்து பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களில் இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் சிறைக்காவலர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் மட்டும் இதுவரை பயிற்சிக்கு அனுப்பப்படவில்லை. தீயணைப்பு துறைக்கு தேர்வு செய்யப்பட்டும் பயிற்சிக்கு அனுப்பாததால் கடும் மன உளைச்சலில் உள்ளனர். பணி நியமன ஆணை கிடைத்தாலும், வேலை கிடைக்குமா, கிடைக்காதா என, தவித்து வருகின்றனர்.

வேலைக்குச் சம்பளம் கிடைக்காமல் அவர்களது குடும்பத்தினரும் தவித்து வருகின்றனர். தீயணைப்பு துறையில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் ஒரு பகுதியை மட்டும் நிரப்பும் நோக்கில் 2023-ல் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்பின், ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டதால், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இதுபோன்ற சூழலில், தேர்வு செய்யப்பட்ட தீயணைப்பு வீரர்களை பணியில் ஈடுபடுத்தாவிட்டால், பணியாளர்கள் பற்றாக்குறையால், தீயணைப்பு துறை முடங்கும் நிலை உள்ளது. கோடை காலம் துவங்கினால், தீயணைப்பு துறையினருக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தீ விபத்துகள் ஏற்பட்டால், கூடுதல் தீயணைப்பு வீரர்கள் தேவை. அதை கருத்தில் கொண்டு, தேர்வு செய்யப்பட்ட 674 தீயணைப்பு வீரர்களையும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு அனுப்பி பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.