மேட்டூர்: கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக மழை குறைந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 7,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6,500 கன அடியாக சரிந்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஒகேனக்கல்லில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவிகளில் குளித்தும், ஆற்றில் பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 8,099 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,325 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கன அடியும் திறக்கப்படுகிறது. நீர்வரத்தை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 108.22 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 107.88 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 73.25 டிஎம்சி.