சென்னை: அங்கன்வாடி ஊழியராகப் பணியாற்றிய தனது தாயார் காலமானதால், தனக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என்ற அரசாணையை அரசு ரத்து செய்துள்ளதால் அங்கன்வாடி பணியாளர் பணி வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரர் விக்ரமுக்கு 8 வாரங்களுக்குள் வேலை வழங்க உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை உயர்நீதிமன்றம் அமல்படுத்தவில்லை என்று விக்ரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆஜரானார். அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளை அங்கன்வாடி பணியாளர்களாக நியமிக்க வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அரசு ஆணை அமலில் உள்ளது.
அதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் சமூக நலத்துறை செயலாளர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.