பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு, அய்யங்கோட்டை, நெல்லூர், தேவாரப்பன்பட்டி, சித்தையன்கோட்டை, சிங்காரக்கோட்டை, நல்லாம்பிள்ளை, தாண்டிக்குடி மலையடிவாரம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது. கடந்த 4 மாதங்களாக பெய்த தொடர் மழையால் இப்பகுதியில் விவசாய பணிகள் துவங்கியது.
இதில் மக்காச்சோளம், நெல் போன்ற மானாவாரி பயிர்களும், ஊடுபயிராக மொச்சை, தட்டாங்காய் போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டன. இந்நிலையில், கடந்த ஆண்டு மொச்சைக்கு போதிய விலை கிடைக்காததாலும், பராமரிப்பு செலவு அதிகம் என்பதாலும் பெரும்பாலான விவசாயிகள் மொச்சை பயிர்களை பயிரிடவில்லை. குறைந்த பரப்பளவில் மொச்சை பயிர்கள் பயிரிடப்பட்டன.

இதனால், விளைச்சல் குறைந்து, சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக மார்க்கெட்டில் பச்சைப்பயறு விலை ஒரு கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 ரூபாய் வரை விற்பனையானது. இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், ”இந்த பகுதியில் விளையும் பச்சைப்பயறு நல்ல சுவையும், மணமும் கொண்டது. ஜனவரியில் தான் அறுவடை. வரத்து குறைந்ததாலும், குறைந்த பரப்பளவில் பயிரிடப்பட்டதாலும் பச்சை பீன்ஸ் விலை அதிகரித்துள்ளது” என்றார்.