கிருஷ்ணகிரி: வக்பு சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து ஜமாத் மற்றும் உலமா கூட்டமைப்பு சார்பில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்ட திருத்தம் தொடர்பாக திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதிமுக சொல்வதை முஸ்லிம்கள் நம்பியதில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது.

அதிமுகவுக்குக் கொடுக்கப்படும் வாக்குகள் பாஜகவுக்குக் கிடைத்த வாக்குகள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா முஸ்லிம்கள் மீது அன்பும் பாசமும் கொண்டிருந்தார். முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினார். அவர் ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால் தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.