சென்னையின் கிளாம்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய ரயில் நிலையம் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நடைமேடை அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளதுடன், பிற கட்டுமான பணிகளும் இறுதி கட்டத்தில் உள்ளன. இந்தத் தகவல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சியாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தை மாற்றி, வண்டலூர் அருகே ரூ.394 கோடியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த 2023 டிசம்பரில் திறக்கப்பட்டது. ஆனால் இந்த பேருந்து நிலையம் நகர மையத்திலிருந்து சுமார் 26 கி.மீ தொலைவில் இருந்ததால், பயணிகள் அங்குச் செல்வதில் சிரமம் சந்தித்து வந்தனர். புறநகர் ரயில்கள் செல்லாததால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இதனைத் தீர்க்க, புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு பரிந்துரை செய்ததை அடுத்து, ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூர் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வே ஒப்புதல் வழங்கியது. ரூ.20 கோடியில் நடைமுறையில் வந்த இந்த திட்டத்தின் பணிகள் தற்போது நிறைவுப் பெறத் துவங்கி உள்ளன. இதனுடன் பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலமும் கட்டப்பட்டு வருகிறது.
முன்னதாக இந்த திட்டத்தை 2023 நவம்பரில் முடிக்கத் திட்டமிட்டிருந்தாலும், பருவமழை மற்றும் நிலம் கையகப்படுத்தல் பிரச்சினைகளால் பணிகள் தாமதமாயின. தற்போது மேடைகள், மேற்கூரைகள், நுழைவுவாயில், டிக்கெட் கவுண்டர், கழிவறைகள் உள்ளிட்டவை விரைவாக கட்டி முடிக்கப்படுகின்றன. அதிகாரிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் பணிகள் முடிவடையும் என உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயில் நிலையம் மூன்று பிளாட்பாரங்களுடன், 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நிற்கக்கூடிய நீளத்தில் கட்டமைக்கப்படுகிறது. மேலும் மேலாளர் அறை, நகரும் படிக்கட்டுகள், கண்காணிப்பு கேமராக்கள், நடைமேம்பாலம், டிக்கெட் அலுவலகம், வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் இதில் கொண்டுவரப்படுகின்றன.
இந்த நிலையம் திறக்கப்படுவதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும், சென்னைக்கு வரும் பயணிகளுக்கும் மிகுந்த சிரமம் குறையும் என நம்பப்படுகிறது. தற்போது அதிகாரிகள் கூறிய தகவல் பேருந்து பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.