தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியதற்கான காரணம் குறித்து அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி கேள்வி எழுப்பினார். எம்ஜிஆர் சத்துணவுத் திட்டம் மற்றும் ஜெயலலிதா தலைமையில் தொடங்கப்பட்ட மடிக்கணினி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்ததாக கூறினார். திமுக அரசு கொண்டு வரும் மகளிர் உரிமைத் திட்டம் உண்மையில் சமூக மாற்றத்திற்காகவா, இல்லையெனில் வாக்கு வங்கிக்காகவா? என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திமுக அரசு கொண்டு வந்த பள்ளி காலை உணவுத் திட்டம் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். அந்த திட்டம் வாக்கு வங்கிக்காக கொண்டு வந்ததா? என்று எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கேட்டார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, காலை உணவுத் திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்றும், தற்போதைய அரசு அதைத் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு, இலங்கைத் தமிழர்களின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை குறிப்பிட்டு, அவற்றும் வாக்கு வங்கிக்காகதானா? என்று எதிர்க்கட்சியினரிடம் எதிர்மறையாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது? என சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அரசு அந்த திட்டத்தை நிறுத்தவில்லை என்றும், அதிமுக அரசு அதை நிறுத்திவிட்டு சென்றதாகவும் தெரிவித்தார். அந்த திட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்து, மீண்டும் மடிக்கணினி வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். திமுக ஆட்சியில் வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும் சமமான முன்னேற்றத்தைக் கொண்டுவருவதே அரசின் நோக்கம் என்று கூறினார். எனவே, இந்த விவாதம் தேவையற்றது என்று முடிவுறுத்தினார்.