தமிழ்நாட்டில் 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதன் மூலம் மின்வாரியத்தின் வருவாய் 96% அதிகரித்துள்ளதுதான், ஆனால் இழப்பு தொடர்ந்து நீடிப்பது அதிர்ச்சியளிக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் மின்கட்டணம் உயர்த்திய பிறகு மட்டும் ரூ.23,8653 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. 2021-22 ஆம் ஆண்டில் மின்வாரியத்தின் இழப்பு ரூ.9,130 கோடி மட்டுமாக இருந்த நிலையில், இப்போது ரூ.6,920 கோடி இழப்பாக தொடர்வது கேள்விக்குறியாக உள்ளது.
மின்வாரியம் தனது மொத்த மின் வணிகத்தில் 90% மின்சாரத்தை தனியாரிடமிருந்து அதிக விலைக்கு வாங்குவதால், லாபம் ஈட்ட முடியாமல் இருக்கிறது. 2021-22 ஆம் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.4.50க்கு வாங்கப்பட்ட நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் ரூ.6.72 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மின்சார விலையேற்றம் 49.33% அதிகரித்துள்ளது.
மின்வாரியத்தின் சொந்த உற்பத்திச் செலவும் அதிகரித்து, 2021-22 ஆம் ஆண்டில் ரூ.5.50 இருந்த ஒரு யூனிட் உற்பத்திச் செலவு 2023-24 ஆம் ஆண்டில் ரூ.8.01 ஆக உயர்ந்துள்ளது. இதற்கான காரணத்தை அரசு விளக்க வேண்டும் என்றும், மின்சார விலையேற்றம் தொடர்பாக உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.