சென்னை: தெருநாய் தொல்லையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கூட்டம் இன்று சென்னையில் முதல்வர் தலைமையில் நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சென்னையில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது.

பல தெருக்களில் ஆங்காங்கே சுற்றித் திரியும் தெருநாய்கள், பொதுமக்களைக் கடித்துக் காயப்படுத்துகின்றன. இரவில் நாய்கள் அதிக அளவில் தெருக்களில் சுற்றித் திரிவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சத்தில் உள்ளனர்.
தெருநாய்களைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. கருத்தடை செய்தல், கண்காணிப்பு, நாய்களை தங்குமிடங்களுக்கு மாற்றுதல் மற்றும் ரேபிஸ் தடுப்பூசி குறித்து விவாதங்கள் நடைபெறும்.