திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் அண்ணாமலையார் கோயில் மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலை மலையில் டிசம்பர் 1-ம் தேதி மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மலையடிவாரத்தில் உள்ள வ.உ.சி.நகர் 11-வது சாலையில் 4 வீடுகள் மீது பாறைகள் விழுந்து மண்ணில் புதைந்தன.
இதில், ராஜ்குமார் (38), இவரது மனைவி மீனா (27), இவர்களது மகன் கவுதம் (9), மகள் இனியா (5), சரவணன் மகள் ரம்யா (7), மஞ்சுநாதன் மகள் வினோதினி (14), சுரேஷ் மகள் மகா (7). பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் சிக்கினர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்பட 170 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நிலச்சரிவில் சிக்கி 2-வது நாளாக 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 3-வது நாளில் (டிசம்பர் 3) மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன. உடல்கள் அனைத்தும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அனைத்து உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் வ.உ.சி.தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தி.மலையில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை நேரில் சென்று பார்வையிட்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, சட்டப் பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், செங்கம் எம்எல்ஏ எம்.பி. கிரி, மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.