தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரை மானிய விலையிலும் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் பயன்பாடு 2 மாதங்களுக்கு ஒரு முறை அளவிடப்படுகிறது. சில ஊழியர்கள் மீட்டரிங் வருவதற்கு காலதாமதம் செய்வதால், வீடுகளுக்கு நேரில் சென்று மீட்டர் போடாததால், அரசு சலுகைகளை பெற முடியாமல் தவிக்கின்றனர். எனவே, மாதாந்திர அளவீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, நுகர்வோர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மாதாந்திர மின் அளவீடு செய்யப்படும்’ என, கூறியிருந்தது. ஆனால், இத்திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இந்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இந்நிலையில், மாதாந்திர மின் நுகர்வு கணக்கீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மின் வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- மாதாந்திர மின் நுகர்வு கணக்கிட 2024 முதல் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு 2023-ல் டெண்டர் கோரப்பட்டது. இதில் பங்கேற்ற நிறுவனங்கள், புதுச்சேரியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கு குறைந்த விலையில் சலுகை அளித்த நிலையில், தமிழகத்தில் அதிக விலையை வழங்கின.
இதனால், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்துக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. தகுதியான நிறுவனங்களுக்கு 3-4 மாதங்களுக்குள் பணி ஆணை வழங்கவும், அடுத்த 6 மாதங்களுக்குள் மாதாந்திர கணக்கீடு திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இவ்வாறு கூறினார்கள்.