திருச்சி: திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் கோயிலாக போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பிரம்மோத்ஸவம் பங்குனி தேர் திருவிழா பிரசித்தி பெற்றது. அதன்படி, திருவானைக்காவல் கோயிலில் பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, இன்று மாலை தொடங்கி 13-ம் தேதி காலை வரை விநாயகர், சுப்பிரமணியர் உற்சவம் நடக்கிறது. தேவார மூவர் உற்சவம் (நால்வர் புறப்பாடு) வரும் 13-ம் தேதி மாலை தொடங்கி 16-ம் தேதி காலை வரை நடக்கிறது. 16-ம் தேதி மாலை முதல் 19-ம் தேதி காலை வரை கல்யாண சுந்தரமூர்த்தி உற்சவம் நடக்கிறது. 19-ம் தேதி மாலை சந்திரசேகரருக்கு ஆனந்தவல்லி பட்டாபிஷேகம் செய்யப்பட்டு 4-ம் பிராகாரத்தை வலம் வந்து திக் பந்தனம் கண்டருள் வைபவம் நடக்கிறது.

20-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சந்திரசேகரருடன் ஆனந்தவல்லி அம்மன் 3-ம் பிரகாரத்தை வலம் வருவார். 25-ம் தேதி மதியம் 12 மணிக்கு எட்டு திசைகளிலும் கொடியேற்றம் நடக்கிறது. அன்று மாலை அம்மனுக்கும், சோமாஸ்கந்தருக்கும் ஏக சிம்ஹாசனப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டு, 4-ம் பிராகாரத்தை வலம் வருவார்கள். தினமும் பல்வேறு தலங்களிலும், வாகனங்களிலும் அம்மன், சுவாமிக்கு மகுடம் சூட்டப்படும். அதைத்தொடர்ந்து 29-ம் தேதி தெருவடைச்சான் ஊர்வலம் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வரும் 30-ம் தேதி காலை 7.09 மணி முதல் 7.20 மணிக்குள் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக, சிவபெருமான் அம்மன் வேடமணிந்தும், அம்மன் சிவன் வேடமணிந்தும் ஐந்தாம் பிரகாரத்தை வலம் வரும் ‘பஞ்சப் பிரகாரம்’ மார்ச் 14-ம் தேதி நடைபெறுகிறது. உலகிலேயே இக்கோயிலில் மட்டுமே காணக்கூடிய தனிச்சிறப்பு வாய்ந்த காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.